அத்துடன், குற்றவாளிக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி கொழும்பிலுள்ள விடுதி ஒன்றில் குறித்த பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், தண்டனைச் சட்டக்கோவையின் 360 அ (1) பிரிவின் கீழ் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இலங்கையில் வசித்து வந்த உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவரின் ஊடாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மாதம் 1,500 அமெரிக்க டொலர் சம்பளத்தில் வேலை அல்லது குழந்தை பராமரிப்பு வேலை வழங்குவதாகக் கூறி இலங்கைக்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
விமானச்சீட்டு மற்றும் விசா ஏற்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைக்கு வந்த அந்தப் பெண்ணை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து குறித்த பெண்ணும் அவரது கணவர் எனக் கூறப்படும் இலங்கை முச்சக்கரவண்டி சாரதியான 'லாரன்ஸ்' என்பவரும் அழைத்துச் சென்றுள்ளனர்.
பின்னர், நீர்கொழும்பில் உள்ள வீடொன்றில் தங்கவைக்கப்பட்ட அந்தப் பெண், அன்றைய தினமே வெளிநாட்டவர் ஒருவருக்கு பாலியல் சேவைக்காக பலவந்தமாக அனுப்பப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் வெள்ளவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கவைக்கப்பட்ட அவரிடமிருந்து கடவுச்சீட்டு பறிக்கப்பட்டதுடன், வெளி உலகத்துடனான தொடர்புகளும் கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையைத் தாங்க முடியாத பாதிக்கப்பட்ட பெண், இரகசியமாக தனது தாயாரைத் தொடர்புகொண்டு தகவல் வழங்கியுள்ளார். இதனையடுத்து, அவரது தாயார் உஸ்பெகிஸ்தான் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து இலங்கை குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்து, குறித்த பெண்ணை மீட்டு தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது குற்றம்சாட்டப்பட்டவர் குற்றத்தை மறுத்திருந்த போதிலும், வங்கி அறிக்கைகள் உள்ளிட்ட சான்றுகளின் அடிப்படையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, 2020 டிசம்பர் 31 ஆம் திகதி கொழும்பிலுள்ள விடுதியில் பாலியல் சேவைக்காக வழங்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதி, 'லாரன்ஸ்' என்பவரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டமை வங்கி அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, குற்றம் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தீர்மானித்து, குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையையும் 10,000 ரூபாய் அபராதத்தையும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.